Monday, December 31, 2012

மரண தண்டனை அவசியம் என்பதை டெல்லி கற்பழிப்பு நினைவூட்டுகிறது- சிங்கப்பூர் அமைச்சர்

சிங்கப்பூர்: டெல்லியில் இளம் மாணவி மிகவும் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதும், அதனால் அவர் மரணமடைந்திருப்பதும், மரண தண்டனை போன்ற கடுமையான ஒரு தண்டனை அவசியம்தான் என்பதை நினைவூட்டுகிறது என்று சிங்கப்பூர் சட்ட அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவைப் போலவே மரண தண்டனையை ஒழிக்காமல் உள்ள நாடு சிங்கப்பூர். அங்கும் இந்தியாவைப் போலவே மரண தண்டனையை ஒழிக்கக் கோரி பல்வேறு விதமான கோரிக்கைகள், போராட்டங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் டெல்லி சம்பவத்தை மேற்கோள் காட்டி மரண தண்டனை தேவைதான் என்று அந்த நாட்டு சட்ட அமைச்சர் சண்முகம் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் எழுதியிருப்பதாவது... 

ஒரு இளம் இந்தியப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக அவர் மரணத்தைத் தழுவியதும் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அது பட்டப் பகலில் நடந்துள்ளது. ஒரு இளம் உயிர் மிகக் கொடுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 

அந்த இளம் பெண்ணை நம்பி அவரது குடும்பத்தினர் இருந்துள்ளனர். தனது நிலத்தை விற்று அப்பெண்ணை அவரது தந்தை படிக்க வைத்துள்ளார். 

நமது ஆழ்ந்த அனுதாபங்களை அந்தக் குடும்பத்திற்கு நாம் தெரிவித்துக் கொள்வோம். இது இதயத்தை முறித்துப் போடும் சம்பவமாக உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் மரண தண்டனையை சந்திக்க வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். மரண தண்டனை வேண்டாம் என்று வாதிடுவோரிடம் நான் இந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி வேண்டும் என்று வாதிடுவேன் என்று கூறியுள்ளார் சண்முகம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன