Sunday, October 9, 2011

பர்தாவில் என் அனுபவங்கள் – இவோன் ரிட்லி





 பர்தாவில் என் அனுபவங்கள் - இவோன் ரிட்லி

தாலிபான்கள் கையில் அகப்படும் வரையில் பர்தா அணிந்த பெண்களை வியப்புடன்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர்களைப்பார்க்கும் போதெல்லாம் 'ஐயோ பாவம்' என்றுபரிதாபப்படுவேன்.அடக்குமுறைக்கு
ஆளான வாயில்லாப் பிராணிகளாக இருக்கிறார்களே என்று நினைத்துக் கொள்வேன்.

ஆப்பானிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட உடனே அதாவது 2001 செப்டம்பர் 11 நிகழ்வு நடந்து 15
நாட்களுக்குப் பிறகு நான் ஆப்கன் சென்றேன். இராணுவ ஆட்சிக்குக் கீழ் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை நேரில் கண்டறிந்து ஒரு பத்திரிக்கைக்குக் கட்டுரை எழுதுவதுதான் என் பயணத்தின் நோக்கம்.

நீல நிறப் பர்தாவில் முகம் உட்பட முழு உடலையும் மூடிக் கொண்டிருந்தேன்.ஆயினும் நான் கைது செய்யப்பட்டு பத்து நாட்கள் சிறை வைக்கப்பட்டேன். நான் அவர்களை சபித்தேன். முகத்தில் துப்பினேன். அவர்கள் என்னைத் திட்டினார்கள்.ஆனாலும் என் வேண்டுகோளை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். குர்ஆனைப்படிப்பதாகவும், இஸ்லாம் குறித்து ஆராய்ச்சி செய்வதாகவும் நான் அளித்த வாக்குறுதியை நம்பி என்னை விடுதலை செய்தனர்.(இந்த விடுதலையில் அதிகம்
மகிழ்ந்தது நானா அவர்களா என்று தெரியவில்லை.)

நான் லண்டன் திரும்பினேன். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப இஸ்லாத்தைக் குறித்து படிக்கத் துவங்கினேன். வியப்பின் உச்சிக்கே சென்று விட்டேன்.ஏனென்றால் குர்ஆனில் நான் எதிர்பார்த்த வசனங்கள் வேறு. அங்கு இருந்த வசனங்கள் வேறு. பெண்களை அடிமைப் படுத்தச் சொல்லும் வசனங்களும் ஆடுமாடுகளைப்போல அடிக்கச் சொல்லும் வசனங்களும்தான் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் பெண்களின் உரிமைக்கும் விடுதலைக்கும் ஓங்கிக் குரல் கொடுக்கும் உன்னத வசனங்களை அதில் நான் கண்டேன். தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டேன். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். என் உறவினர்கள், நண்பர்கள், சொந்தங்கள் எல்லோர்க்கும் அதிர்ச்சி. வியப்பு. ஏமாற்றம்.

பர்தா முறை சமூகமுன்னேற்றத்துக்குத் தடை என்று பிரிட்டிஷ் முன்னால் வெளியுறவுச் செயலர் ஜாக்ஸ்ட்ரோ, பிரதமர் டோனி பிளேர், சல்மான் ருஷ்தி, இத்தாலிய பிரதமர் ரோமோனோபுரோடி ஆகியோரின் அறிக்கையை பரிதாபத்துடனும் வெறுப்புடனும் தான் நான் இப்போது பார்க்கிறேன்- லண்டனில் இருந்தபடி.

பர்தா அணியாமலும் இருந்துள்ளேன். பர்தா அணிந்தும அனுபவம் பெற்றுள்ளேன் என்ற நிலையில் நான் சொல்ல விரும்புவது இது தான். இஸ்லாமிய உலகில் பெண்கள் அடிமை
படுத்தப் படுகிறார்கள் என்று குற்றம் சுமத்தும் ஊடகவியலார்களும்,அரசியல்வாதிகளான பெரும்பாலான ஆண்களும் எதை குறித்துப் பேசுகிறார்களோ அதைப் பற்றிய அறிவு எதுவும் அவர்களுக்கு இல்லை. பர்தா, இளம் வயது திருமணம்,பெண்களுக்கு எதிரான கொடுமைகள், மரண தண்டனை போன்ற எந்த ஒரு விஷயம் குறித்தும் அவர்கள் ஏதும் அறியாத அறிவிலிகளாகத்தான் இருக்கிறார்கள்.

1970-களில் பெண்களின் எந்தெந்த உரிமைகளுக்காக பெண்ணியவாதிகள் போராடினார்களோ அந்த உரிமைகள் எல்லாம் 1400 அண்டுகளுக்கு முன்பே முஸ்லிம் பெண்களுக்கு கிடைத்து விட்டதை குர்ஆனை சற்று ஆழ்ந்து படித்தால் புரிந்து கொள்ளலாம். ஆன்மீகம்,கல்வி என எல்லாத்துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை உண்டு. குழந்தைகளைப்பெற்றெடுத்தல், வளர்த்தல் போன்ற காரணங்களுக்காக பெண்களுக்கு தனி அந்தஸ்தையே அளித்துள்ளது. பெண்களுக்கு இவ்வளவு உரிமைகளை இஸ்லாம் அளித்திருக்க, மேலை நாட்டினர் முஸ்லிம் பெண்களின் உடை, ஒழுங்கு பற்றி ஏன் ரொம்பவும் அலட்டிக் கொள்கிறார்கள்?

நான் இஸ்லாத்தைத் தழுவிய போதும் தலைத்துணி (ஹெட்ஸ்கார்ப்) அணியத் தொடங்கிய போதும் ஏராளமான எதிர்ப்புகள்....

இத்தனைக்கும் என் தலையை மட்டும் தான் மறைத்தேன். அந்த நிலையிலேயே இரண்டாம்தர குடிமகளாக நான் நடத்தப்பட்டேன். இஸ்லாத்துக்கு எதிரான விதவிதமான விமர்சனங்களைக்
கேட்க வேண்டி வரும் என எனக்குத் தெரியும். ஆனால் முன்பின் அறிமுகமில்லாதவர்கள் கூட என்னிடம் பகைமை கொள்வார்கள் என சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை.

'வாடகைக்கு' (For Hire ) என மின்னும் எழுத்துகளுடன் 'சர்..சர்' என ஓடிக் கொண்டிருந்த வாடகை வண்டிகள். ஒரு வாகனம் எனக்கு சற்று முன்பாக வந்து நின்றது. நான் அதில் ஏறுவதற்காக வாகனத்தை நெருங்கியதும் ஓட்டுனர் என்னை ஒரு தடவை பார்த்து விட்டு சட்டென்று வண்டியை கிளப்பிக் கொண்டு போய்விட்டார். 'பின் இருக்கையில் ஒரு வெடிகுண்டை ஏற்றிக் கொள்ளாதே' என்றார் இன்னொரு ஆள். 'பின்லாடன் எங்கே ஒளிந்திருக்கிறான்' என்று என்னிடமிருந்து அறிந்து கொள்ள விரும்பினான் ஒருவன்.

கண்ணியமாக உடை அணிய வேண்டும் என்பது முஸ்லிம் பெண்கள் மீது மார்க்க ரீதியான கடமையாகும். ஆனாலும் எனக்குத் தெரிந்த நிறைய முஸ்லிம் பெண்கள் முகம் தவிர எல்லா பாகங்களையும் மறைக்கும் ஹிஜாப் உடையைத்தான் அணிகிறார்கள். நிகாப் உடையை விரும்புபவர்களும் உண்டு. பர்தா தனி நபர் பிரகடனம் என்றே கருதுகிறேன்.

'நான் ஒரு முஸ்லிம் பெண். என்னிடம் நீங்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்என்று என் உடை அறிவிக்கிறது. ஒரு பிஸினஸ் உடை அணிந்த எக்ஸ்க்யுடிவ் தான் மரியாதையாக நடத்தப்படுவதை எதிர் பார்ப்பான் என வால்ஸ்ட்ரீட் பாங்கரின் அறிவிப்பு போல்தான் இஸ்லாமிய பர்தாவும். என்னைப் போல் இஸ்லாத்தை தழுவிய ஒருவர், பெண்களைத் தவறாக பார்க்கும் ஆண்களின் நடத்தையையும், தவறான இச்சையுடன் கூடிய அணுகுமுறையையும் சகித்துக் கொள்ள முடியாது.

பல ஆண்டுகளாக ஒரு மேற்கத்திய பெண்ணியவாதியாக இருந்தவள் நான். மதச்சார்பற்ற பெண்ணியவாதிகளைவிட அடிப்படை மாண்புகளில் சிறந்தவர்கள் முஸ்லிம பெண்ணியவாதிகள்தான் என்பதை அன்றே நான் உணர்ந்திருந்தேன். அழகிப் போட்டி எனும் பெயரில் நடைபெறும் ஒழுக்கம் கெட்ட கூத்தாட்டங்களை நாங்கள் வெறுத்தோம். 2003-ல் உலக அழகிப் போட்டியில் ஆப்கன் அழகி விதா சமத்சாயி நீச்சல் உடையில் வந்த போது 'பெண் விடுதலையை நோக்கிய ஒரு பாய்ச்சல்' என்று பாராட்டப்பட்டதை கேட்டு எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 'பெண்ணுரிமை வீராங்கனையாக' அவரைப் போற்றிப் புகழ்ந்த நடுவர்கள் அவருக்கு சிறப்புப் பரிசும் அளித்தார்கள்.

உண்மையில் பெண் விடுதலை என்பது என்ன?

அழகு,செல்வம், அதிகாரம், பதவி, ஆண், பெண் ஆகிய அடிப்படையில் இவர் உயர்ந்தவர்,இவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடுகள் இஸ்லாத்தில் இல்லை. உயர்வுக்கு அடிப்படை விதிகளாய் இஸ்லாம் வகுத்திருப்பது இறையச்சமும் ஒழுக்கமும்தான். நிகாப் அணிவது மூடத் தனமானது என்று அண்மையில் இத்தாலியப் பிரதமர் கடுமையாக விமர்சித்து இருந்தார். அது மடடுமல்ல சமூகத் தொடர்புகளுக்கு அது மிகப்பெரும் இடையுறு என்றும் கூறியுள்ளார். இதை விட ஓர் அபத்தமான கூற'று வேறு எதுவும் இருக்க முடியாது.

அப்படியானால் செல்போன்கள், லாண்ட்லைன்கள், இமெயில், எஸ்எம்எஸ், பேக்ஸ் போன்றவற்றை எல்லாம் தூக்கி எறிந்து விட வேண்டியதுதானா? பேசுபவரின் முகம் தெரியவில்லை என்பதற்காக யாராவது வானொலியை அணைத்து விடுவார்களா? இஸ்லாமிய நிழலில்தான் எனக்கு மரியாதை கிடைத்தது. திருமணம் முடிந்திருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி அறிவைத் தேடுவது ஒரு முஸ்லிம் பெண்ணின் கடமை என்று இஸ்லாம் என்னிடம் கூறியது. கணவனுக்காக மனைவி சமைக்க வேண்டும், துணி துவைக்க வேண்டும்
என்றெல்லாம இஸ்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை.

முஸ்லிம் கணவர்கள் தங்களின் மனைவியரை கண்மூடித் தனமாக அடிக்கலாம் என்கின்ற தவறான பிரச்சாரம் போன்றதுதான் இதுவும். குர்ஆனிலிருந்தும் நபிமொழிகளில் இருந்தும் முன் பின் வாக்கியத் தொடர்புகளை ஆராயாமல் ஆங்காங்கே சில சொற்களை பிரித்தெடுத்து
விமர்சகர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரம் காட்டுகிறார்கள். எற்த வகையிலும் பெண்கள் மீது அநீதியான முறையில் கை வைக்கக் கூடாது என்றுதான் இஸ்லாம் கட்டளை இட்டுள்ளது.

பெண்களின் தகுதி நிலை என்ன, அவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து முஸ்லிம் ஆண்கள் தங்களின் கருத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பது சரியே. ஆனால் மேற்கத்தியர்களின் கதை மட்டும் என்னவாம்?

குடும்ப வன்முறைகள் குறித்து அண்மையில் வெளியான தேசிய ஆய்வின்படி கடந்த 12 மாதங்களில் கணவனமார்களால் தாக்கபபட்டு படுகாயம் அடைந்த மனைவியரின் எண்ணிக்கை 40
லட்சம். நாள்தோறும் மூன்று பெண்கள் கணவனால் அல்லது ஆண் நண்பர்களால்(பாய்பிரண்ட்) கொலை செய்யப் படுகிறார்கள்.

பெண்களைக் கொடுமைப்படுத்தும் ஆண்கள் குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ, கலாச்சாரத்தையோ சார்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டயமல்ல என்றும அந்த ஆய்வு சொல்கிறது. இது மதம்,இனம், வர்க்கம், கலாச்சாரம், ஏழை, பணக்காரர் போன்ற வேறுபாடுகளை எல்லாம் கடந்து நிற்க்கும் பன்னாட்டுப் பிரச்னை. பெண்களை விட தங்களை உயர்வாகக்கருதும் ஆண்கள்தான் உலகம் முழுதும் இருக்கிறார்கள். ஒரே விதமான பணியைச் செய்தாலும் கூட ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியம்தான் கிடைக்கிறது.

மேற்குலகில் பெண்ணுரிமை, பெண் விடுதலை என்றெல்லாம வாய் கிழிய பேசப்பட்டாலும் அங்கு பெண்கள் ஒரு போகப் பொருளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று இனியும் யாரேனும் கூப்பாடு போட்டால் அவர்கள் 1992 -ல் ரெவரண்ட் பாட் ராபர்ட்ஸன் கூறியதை தங்களின் மண்டையில் ஏற்றிக் கொள்ள வேண்டும். அவர் கூறினார:

'கட்டிய கணவனை கைவிடுவதற்கும்,கள்ளக் காதலில் ஈடுபடுவதற்கும், பெற்ற பிள்ளைகளை கொலை செய்வதற்கும்,ஒழுக்கக் கேடுகளில் மூழ்குவதற்கும், ஓரினச் சேர்க்கைக்கு உற்சாகம்
ஊட்டவும், குடும்ப அமைப்பைக் குலைப்பதற்க்கும், முதலாளித்துவத்தின் நன்மைகளை சீரழிக்கவும் சில சோஷலிஷ அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட சதித்திட்டம்தான் 'பெண்ணியம்' என்பது.

இப்போது சொல்லுங்கள் - யார் நாகரிகமானவர்கள்? யார் நாகரிகமற்றவர்கள்?

-இவோன் ரிட்லி
-லண்டன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன