Wednesday, May 23, 2012

அமெரிக்க முஸ்லிம் பெண்மணி வென்றெடுத்த வெகுமதி!


சூசன் பஷீர்!

இதுதான் இந்தப் பேறு பெற்ற பெண்மணியின் பெயர். அண்மையில் அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி நகரை வியப்பில் ஆழ்த்திய முஸ்லிம் பெண் இவர்! இவருக்கு என்ன நிகழ்ந்தது? இஸ்லாத்தைத் தழுவும் அமெரிக்கப் பெண்மணிகள் அனைவருக்கும் நிகழ்ந்துவரும் சோதனைகள்தாம் இவருக்கும் நிகழ்ந்தன.

‘The Kansas City Star’ என்ற பத்திரிக்கை தரும் தகவல்களின்படி, இப்பெண் கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான AT&T யில் முக்கியப் பொறுப்பில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தார்.


2005 ஆம் ஆண்டில் இவர் இஸ்லாத்தைத் தழுவியபோது, வடக்குக் கான்சாஸ் சிட்டியில் வசித்துவந்தார். அப்போது முதல் தொடங்கியதுதான், இவருக்கு எதிரான religious discrimination என்னும் மதப் பாகுபாட்டுத் தொல்லைகள்!  இருப்பினும் என்ன? ஈமானின் உறுதியால் எதிர்நீச்சல் போட்டுவந்தார் சூசன்.

உடலை முழுவதுமாக மறைத்து, தலைச்சீலை (headscarf) அணிந்துதான் அலுவலகத்திற்கு வந்து தனது பணியை முறையாகச் செய்துவந்தார்.  இவருக்கு எதிரான தொல்லைகள், இவர் இஸ்லாத்தைத் தழுவச் சில மாதங்கள் முன்பிருந்தே தொடங்கிவிட்டனவாம்.  அதற்கு முன், இவருடைய சிறப்பான சேவைகளுக்காக AT&T நிறுவனம் இவருக்குப் பல பாராட்டுச் சான்றுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளதாக அறிகின்றோம்.

ஆனால், எப்பொழுது இவர் முஸ்லிமாக மாறி, ‘ஹிஜாப்’ அணிந்து வேலைக்குச் செல்லத் தொடங்கினாரோ, அன்று முதல் இவருடன் பணியாற்றியவர்கள் இவரைப் பார்த்துக் கேலியும் கிண்டலும் செய்யத் தொடங்கினராம்.  கண் சாடையால் ‘that thing on her head’ என்று கூறிச் சிரித்து மகிழ்ந்தனராம்.

“என்னைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது! அதிர்ச்சியுற்றேன்! இதற்கு முன் நான் எப்படியெல்லாம் உடலின் பெரும் பகுதிகள் தெரிய உடை அணிந்து வந்தபோதெல்லாம் இது போன்ற கிண்டல்கள் இல்லை!  கண் சிமிட்டல்கள் இல்லை! குத்தலான பேச்சுகள் இல்லை! யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை, என் உடையைப் பார்த்து! இப்போது இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் முழு உடலையும் மறைத்து உடையணிந்தபோது.....?” என்று வியக்கிறார்; வேதனைப் படுகிறார்.

சகோதரி சூசனின் அலுவலக மேஜை மீது, தலையை மறைத்த தோற்றத்தில் கன்னி மேரியின் படமும், அதனுடன் பைபிளின் வசனம் ஒன்றும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது! அந்த வசனத்தையும் தோற்றத்தையும் பார்க்கும்போதெல்லாம், சூசனுடன் பணியாற்றும் பெண்களும் ஆண்களும் கேட்கும் கேள்வி, அவரை வேதனைப் பட வைக்கிறது!  “ஏண்டி!  நீ தீவிரவாதியா? இந்தக் கட்டடத்தை வெடி வைத்துத் தகர்க்கப் போகிறாயா?  Towel-headed Terrorist!”  திட்டித் தீர்த்தார்கள்.

மார்ச் 2008 வரை பொறுத்துப் பார்த்தார் சகோதரி சூசன். அதன் பின்னர், Equal Employment Opportunity Commission என்ற சட்டப் பாதுகாப்புத் துறையிடம் தன்  முறையீட்டை வைத்தார். அந்தத் துறையும் தனது புலனாய்வைத் தொடங்கிற்று. இதன் பிறகே, எதிரி ஏவுகணைத் தாக்குதல்கள் கடுமையாயின!  இதையொட்டி நிகழ்ந்ததுதான் climax எனும் உச்ச கட்டச் சோதனை! அதுவே சூசனை வன்மையாக இயக்கிற்று!

சூசனின் மேலதிகாரி ஒரு நாள் அவரருகில் வந்து நின்று, ஆத்திரத்துடன் அவருடைய ஹிஜாபைப் பிடித்திழுத்தார்! அவ்வளவுதான்! பெண் சிங்கம் கர்ஜிக்கத் தொடங்கிற்று!  AT&T நிறுவனத்தை எதிர்த்துக் குரலெழுப்பினார் சகோதரி சூசன் பஷீர்! 

“இந்த மேலதிகாரியைப் பணி நீக்கம் செய்யவேண்டும். அல்லது என்னை இந்த அலுவலகத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றவேண்டும்.”  நியாயமான கோரிக்கை. இவற்றுள் ஒன்றும் நிகழவில்லை. ஆண்டுச் சம்பளம் 70,000 டாலர் கிடைத்துவந்த தனது பணியைத் தொடர மனமின்றி, ஒன்பது மாதங்கள் வீட்டில் இருந்துவிட்டார் சூசன். அதன் பின் ஒரு நாள் அலுவலகம் வந்தவருக்கு, தன்னையே பணி நீக்கம் செய்த எழுத்தாணை ஆயத்தமாக இருந்தது!

அடுத்து சூசன் செய்தது, நீதிமன்ற முறையீடு! இதைச் செய்துவிட்டு, அமெரிக்காவின் கடைக்கோடிக்குப் போய், ‘ஆன்கரேஜ்’ என்ற ஊரில் ஒரு சிறு பணியில் அமர்ந்து, தனது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

“என்னைப் பணி நீக்கம் செய்ததுகொண்டு, தான் விரும்பிப் பணி செய்துவந்த ஊழியர் ஒருத்தியை இழந்துவிட்டது, AT&T நிறுவனம். நான் எனது வேலையை விட விரும்பவில்லை. ஏனெனில், அவ்வளவுக்கு என் பணியை ஆர்வத்துடன் செய்துவந்தேன். எனக்கே ஓர் ஆத்ம திருப்தி, நான் எனது நாட்டு முன்னேற்றத்தில் என் பங்களிப்பை முறையாகச் செய்கிறேன் என்று.  இப்போது அந்த மோசமான நிர்வாகத்தின்கீழ் வேலை செய்யவில்லை என்பதுகொண்டு, நான் மகிழ்கின்றேன்.  

ஆனால், எனது நாட்டின் பொருளாதாரச் செலவினங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், எனது வாழ்க்கையை எத்துணைப் போராட்டத்துடன் மேற்கொள்ளவேண்டியுள்ளது என்று நினைக்கும்போது, என் இதயம் கணக்கிறது.”  வேதனைப்படுகிறார் சகோதரி சூசன் பஷீர்.  

வெந்த புண்ணில் வேல் பாய்வது போன்று, அவருடைய இல்லற வாழ்விலும் விரிசல் கண்டுள்ளது! ஆம், கணவர் பஷீரிடமிருந்து விவாக ரத்துக் கோரி இப்போது விண்ணப்பமும் செய்துள்ளார் சூசன்!

வந்தது ‘ஜாக்சன் கவுன்டி’ நீதித் துறையின் சட்டத் தீர்ப்பு!  AT&T நிறுவனம் சகோதரி சூசனுக்கு ஐந்து மில்லியன் டாலர் இழப்புத் தொகை கொடுக்கவேண்டும்! அது மட்டுமன்று.  சூசன் இழந்த வேலைக்குப் பகரமாக அந்த நிறுவனம் 1,20,000 டாலர் சூசனுக்குக் கொடுக்க வேண்டும்; இது தவிர, வழக்கறிஞருக்குக் கொடுக்கவேண்டிய தொகை பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும்!

AT&T இத்தீர்ப்பை எதிர்த்து மறு முறையீடு செய்யும் என்று அறிவித்துள்ளது.  அது தோல்வியடைந்து, இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே என்று ஆக, நாமனைவரும் வல்ல இறைவன் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோமாக!

-அதிரை அஹ்மத்

2 comments:

  1. பாகிஸ்தான்,சோமாலியா,சவூதி போன்ற நாடுகளாய் இருந்தால் சட்டம் முல்லாக்களின் கவட்டியில் போய் ஒளிந்திருக்கும்..ஆனால் அமெரிக்கா,இந்தியா,இங்கிலாந்து போன்ற நாடுகளில் சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான்..

    ReplyDelete
  2. சிரிப்பு சிங்காரம் அவர்களே... சட்டத்தை பற்றி இந்தியனாக நாம் பேச வெட்கப்பட வேண்டும்... எந்த சட்டம் இந்தியாவில் முறையாக பின்பற்றபடுகிறது சொல்லுங்கள்...

    ///அமெரிக்கா,இந்தியா,இங்கிலாந்து போன்ற நாடுகளில் சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான்../// இந்தியாவிற்கு வக்காலத்து வாங்கினால் இந்தியன் என்ற அடிப்படையில் பேசுவதாக எடுத்துகொள்ளலாம் ஆனால் அமெரிக்க , இங்கிலாந்து சட்டத்திற்கு வால்பிடிக்க காரணம் என்ன நண்பரே ... அமெரிக்க கைகூலிகளில் நீங்களும் இருக்கலாமோ என்று சந்தேககிக்க தோன்றுகிறது.. சாவுதியில் போய் மதுபானம் குடித்துபாருங்கள், போதை மருந்து பயன்படுத்தி பாருங்கள் - அப்போது தெரியும் சட்டத்தை உடனுக்குடன் பின்பற்றுவது என்று

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன