கொல்கத்தா: பெண்கள் குட்டைப் பாவாடையும், குறைவான ஆடைகளும் அணிவது தான் அதிகரித்து வரும் ஈவ் டீசிங் பிரச்சனைக்கு காரணம் என்று நடிகரும், திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சிரஞ்ஜித் சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பாரக்னாஸ் மாவட்டம் பராசத்தில் உள்ள பனமாலிபூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் டியூஷனில் இருந்து இரவு நேரத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ரமேஷ் தாஸ் என்னும் வாலிபர் அவரை கிண்டலடித்து சில்மிஷம் செய்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் அவரை நையப்புடைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு குறித்து விசாரிக்க அப்பகுதி எம்.எல்.ஏ. சிரஞ்ஜித் சக்ரபர்த்தி காவல் நிலையத்திற்கு சென்றார்.
பின்னர் அவர் கூறுகையில்,
ஈவ் டீசிங் என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. பெண்கள் குட்டைப் பாவாடை அணிவதும், குட்டியான ஆடை அணிவதும் இதற்கு ஒரு காரணம். அவர்களின் ஆடைகள் தான் ஆண்களைத் தூண்டுகிறது. எனவே, பெண்கள் ஒழுங்காக ஆடை அணிய வேண்டும். ஈவ் டீசிங் செய்பவர்களை தண்டிக்க வேண்டும். ஈவ் டீசிங் கண்டிக்கத்தக்க வேண்டிய விஷயம் தான் என்றாலும் ராவணன் இல்லாமல் ராமாயணம் இல்லை என்றார்.
சிரஞ்ஜித்தின் கருத்து குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியிடம் கேட்டதற்கு அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன