Sunday, May 13, 2012

பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்த - தட்ஸ்தமிழ்.காம் ...!!

இணையதள உலகில் வலம்வரும் தமிழ் மக்களுக்கு தட்ஸ்தமிழ்.காம் என்ற இணையத்தளம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.தமிழில் செய்திகளை வழங்கும் இணையதளங்களில் ஒரு முக்கியமான இணையதளம்.


செய்தித்தாள்களை போலவே உலக செய்திகளோடு சினிமா,அந்தரங்க விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு ஏற்றார்போல் செய்திகளை சோடிப்பதில் கைதேர்ந்த இணையத்தளம்.இதெல்லாம் தெரிந்த ஒன்று தானே.இப்ப அதற்கு என்ன என்கிறீர்களா..?


சினிமா செய்திகள் , நடிகர் நடிகைகளின் கிசு,கிசு என்று பக்கம் பக்கமாக எழுதி காசுபார்க்கும் இந்த இணையத்திற்கே பொறுக்க முடியாமல் சென்றுவிட்டது இன்றைய டிவி சீரியல் தொடர்களின் கதைகள் என்பது தான் ஹைலைட்..

டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! என்ற தலைப்பில் தட்ஸ்தமிழ் இணையத்தளம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.அதை தாய்மார்கள் பார்வைக்கு வைக்கிறோம் - சிந்திக்க வேண்டுகிறோம்.


( என்னமோ சீரியல்களில் மட்டும் தான் அசிங்கங்களும் ,ஆபாசங்களும் இருப்பது போன்று வருத்தபடுகிறது இந்த இணையதளம் இருப்பினும் குறைந்தபட்சம் இந்த தவறையாவது சுட்டிகாட்ட முன்வந்தமை வரவேற்க வேண்டிய ஒன்று தான் )


பிரபல தொலைக்காட்சிகளில் வெளியாகும் நெடுந்தொடர்கள் அனைத்தும் பெண்களை கண்ணீர் சிந்தவைப்பவையாகவும், மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புலம்புகிறார்கள். அதிலும், வருடக்கணக்கில் ஒளிபரப்பாகும் இந்த தொடர்களில் பெரும்பாலும் இருதாரம் கொண்ட கதாபாத்திரங்கள், முறைகேடான காதலை மனதில் வரித்துக் கொண்டு அலையும் கேரக்டர்களுடன் கூடியதாக வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
 

இந்த நெடுந்தொடர்கள் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. மாமியாரை எப்படி வீட்டை விட்டு அனுப்புவது, நாத்தனாரின் வாழ்க்கையை எப்படி கெடுப்பது, மகனிடம் இருந்து மருமகளை பிரித்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது எப்படி என்றுதான் இந்த சீரியல்கள் பெரும்பாலும் கவலைப்படுகின்றன.

இன்னொரு கொடுமை, கஸ்தூரி, உறவுகள், இளவரசி, தங்கம், தென்றல், செல்லமே, போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திற்கு இரண்டு மனைவி கண்டிப்பாக இருக்கும்.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிக்கும் சீரியல்களுக்கு மக்கள் மனதில் கொஞ்சம் மரியாதை இருந்தது. தென்றல் சீரியல் மூலம் அந்த பெயர் பாதி கெட்டுப்போனது. மீதியை திருமதி செல்வம் இப்போது கெடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தவள் கணவனை அதுவும் நேற்றுவரை நண்பனாக கருதியவனை எப்படி வலையில் வீழ்த்தலாம் என்று திட்டமிட்டு சாதிக்கிறது ஒரு கதாபாத்திரம் பார்க்கும் போதே எரிச்சலும், அந்த இயக்குநர் மீது ஆத்திரமும் ஏற்படுகிறது பெண்களுக்கு. ஏனெனில் பெண்கள் மத்தியில் செல்வத்திற்கு என்று ஒரு மரியாதை இருந்தது அதை கெடுத்து விட்டார் இயக்குநர் என்றுதான் சொல்ல வேண்டும்.

கதாநாயகன் ராத்திரி குடித்து விட்டு வருகிறானாம், அவனது மனைவியை தூங்கச் செய்து விட்டு தோழி காத்திருக்கிறாளாம். வழக்கமாக மாடர்ன் டிரஸ் போடும் அவள், அன்று மட்டும் சேலையில் இருக்கிறாள். குடித்து விட்டு போதையில் வரும் நாயகன், கண்ணில் அவள் தனது மனைவி போலவே தெரிகிறதாம்.தட்டுத் தடுமாறி இருவரும் பெட்ரூமுக்குள் போகிறார்களாம். போய்க் கொஞ்ச நேரமான பின்னர் அந்தப் பெண் தலைவிரி கோலமாக இருக்கிறாளாம். போதை தெளிந்த நாயகன், என்னவென்று கேட்க, இப்படிப் பண்ணிட்டியே செல்வம் என்று அவள் புலம்புகிறாளாம். சினிமாவில்தானய்யா இப்படியெல்லாம் வரும்.. டிவி சீரியலிலுமா...

இனி சொல்லவே வேண்டாம். கணவர் ராமனாகவே இருந்தாலும் குல குத்துவிளக்குகள் நம்பப்போவதில்லை. எத்தனை தம்பதிகள் பிரிய காரணமாக இருந்து புண்ணியம் கட்டிக்கொண்டாரோ இந்த இயக்குநர். இவரேதான் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தென்றல் தொடரையும் இயக்குகிறார். அந்த தொடரில் கேட்கவே வேண்டாம் கணவனை விட்டு ஓடிய மனைவியும், மனைவியை விட்டு ஓடிவந்த கணவரும் இணைந்து குடும்பம் நடத்துகின்றனர். அந்த கண்றாவி வாழ்க்கைக்கு விளக்கம் கொடுத்து அதை நியாயப்படுத்துகிறார் இயக்குநர். தமிழ் கூறும் நல்லுலகம் இதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.

இதுதான் என்றில்லை, கிட்டத்தட்ட எல்லா டிவியிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் இப்படித்தான் கன்றாவிக் கட்சிகள் களேபரமாக ஒடிக் கொண்டிருக்கின்றன.

நல்லவேளையாப் போச்சு, தமிழ்நாட்டில் 75 சதவிகித ஊர்களில் அந்த நேரத்தில் கரண்ட் கட் ஆகிவிடுகிறது. தப்பின குடும்பங்கள்!...
                            -----------------------------


சினிமாவை வைத்து பிழைப்பு நடத்துபவர்களே வருத்தபபடுகிறார்கள் பாருங்கள் ... இனியாவது பெண்கள், தாய்மார்கள் இந்த சீரியல் சீரழிவை விட்டு வெளிவருவீர்களா ?

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன